Interview with Swami Chinmayananda, translated into Thamizh


குருதேவருடன் பத்திரிக்கையாளர் டேவிட் ஸ்நோ நடத்திய பேட்டி
University of Sandiego, Sandiego CA

1992 இல் பல்கலைகழக சுற்றுப்பயணத்தின் போது கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் கார்டியன் பத்திரிக்கையாளருக்குக் கொடுத்த பேட்டியின் சில பகுதிகள் இங்கே.

மொழிப்பெயர்த்தவர் - Dr. S.வத்ஸலா, Chinmaya Gardens, Coimbatore

டேவிட் ஸ்நோ:
            இந்த உரையாடலை நான் ஒலிப்பதிவு செய்யலாமா?
சுவாமி சின்மயாநந்தர்:
            நான் எதையும் ரகசியமாக சொல்வதில்லை.

டேவிட் ஸ்நோ:
உங்களுடைய புத்தகங்களில் நீங்கள் கற்றுத்தரும் கருத்துக்கள் மற்ற எல்லா உலக மதங்களையும் வெகுவாக மதிக்க கற்றுத்தரும் என்று குறிப்பிடுகிறீர்கள். அது எப்படி?

சுவாமி சின்மயாநந்தர்:
            ஏனெனில் பேதங்கள் என்பது, கடைபிடிக்கும் சடங்குகளிலும் தொழுகைக்கென கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களின் அமைப்பிலும்தான் இருக்கின்றன. ஒரு கோவில் போல, சர்ச் இருப்பது இல்லை. சர்ச் போல மசூதி கட்டப்படுவதில்லை.
முல்லா, பாதிரியார் போல இல்லை; பண்டிதர் இவர்களிருவரைப்
போலிருப்பதைல்லை. சடங்குகளும் தொழுகைக்கென அமைக்கும் இடமும் வேறுபட்டாலும், தொழுகைக்கென்று ஓர் இடம் எல்லா அமைப்பிலும் உண்டு.
அனைவரும், பக்தியினாலும் மரியாதையினாலும், மனதை அமைதிப்படுத்தும்
முயற்சியில் அங்கு செல்கின்றனர்.

டேவிட் ஸ்நோ:
            (மத) கொள்கைகளிலுள்ள வேறுபாடுகள் முக்கியம் வாய்ந்தவை என்று கருதுகிறீர்களா?
சுவாமி சின்மயாநந்தர்:
            மாணவர்கள் வெவ்வேறு விதமாக இருப்பதால் இந்த மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மதபோதகர்கள் அவரவர்களின் போதனைகளையோ புத்தகங்களையோ அழிந்து விடாமல் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை. அவர்கள் எதிரில் அமர்ந்திருக்கும் மாணவனின் மேல் அக்கறை கொண்டிருந்தனர். விளக்கங்களை மாணவன் ஏற்றுக்கொள்ளுமாறு, எளிமைப்படுத்திக் கூறுவதில் முனைந்து இருந்தனர். அவ்விதம் இயேசுநாதர் பேசும் பொழுது, அவர் முன் கூடியிருந்த, கலிலியில் வாழ்ந்து வந்த ஏழை, எளிய, மீனவ மாணவர்களுக்குப் புரியும் வண்ணமே பேசினார். இருப்பினும் இயேசு நாதருக்கு உயரிய கருத்துக்கள் புரிந்திருக்க வில்லையென, என்று எண்ணுதல் கூடாது. எளியவர்களுக்கு உகந்த விதத்தில் எளிமையாகப் பேசினார். வகுப்பறையில் ஆசிரியர், மாணாக்கர்களுக்குப் புரியும் அளவுதான் கற்ப்பிப்பார். தனக்குத் தெரிந்த அதிகப்படியான அறிவைப் புகட்ட முயற்சி செய்ய மாட்டார் அல்லவா- அது போலதான்.

பௌத்தமதத்தைப் பார்ப்போமேயானால், புத்தர் போதித்த மாணாக்கர்கள் அறிவில் உயர்ந்தவர்கள். அத்தகையவர்களுக்கு ஏற்றவிதத்தில் போதனை அமைந்திருந்ததால் பௌத்தமதம் சிறந்திருந்தது. போதகர்கள் அவரவர்களின் காலகட்டத்திற்கேற்ப, அவரவர்களின் மாணாக்கர்களுக்கேற்ப அவர்களின் நூல்களும் அணுகுமுறைகளும் வேறுபட்டன.

டேவிட் ஸ்நோ:
வேதாந்தத்தின் உண்மை த்துவம் மற்றா எல்லா மதங்களின் கொள்கைகளையும் உள்ளடக்கியதா?
சுவாமி சின்மயாநந்தர்:
கண்டிப்பாக

டேவிட் ஸ்நோ:
            உலக வாழ்க்கை மேலும் மேலும் சிக்கலாகி வரும் நிலையில் மக்களுக்கு உங்களுடைய கருத்துக்களில் உள்ள ஆர்வம் அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா?
சுவாமி சின்மயாநந்தர்:
            உலகம் அல்ல சிக்கல், மனிதன்தான் சிக்கல். உலகம், சூரியன், சந்திரன்,  நட்ச்சத்திரங்கள் இவற்றில் சிக்கலில்லையே.  தாவர இனங்களில் சிக்கலில்லை, விலங்கினங்களில் சிக்கலில்லை. நீங்கள் காணும் எல்லா துக்கங்கள் மற்றும் சுற்றுப்புற சூழலின் நிலைகேடு உட்பட மனிதனின் கலங்கமுற்ற மனமே காரணம், உலகம் அல்ல. மனிதனின் மனம் பேராசை, பொறாமை, வெறுப்பு, அபகரித்தல் என தீயகுணங்களை வரம்பற்று குவித்து வைத்திருக்கிறது.  இதனால் சுற்று சூழலில், இயற்கையில் இருக்கும் சமநிலை சீர்குலைகிறது. 

டேவிட் ஸ்நோ:
            சமநிலை மேன்மேலும் சீர்குலைவதால் மக்கள் மதங்களை  நோக்கி வருகின்றனரா அல்லது விலகி செல்கிறார்களா?
சுவாமி சின்மயாநந்தர்:
            பகுத்தறிவு படைத்த மனிதன் ஒரு கனமேனும், நின்று திரும்பி பார்த்து கற்கமாட்டானா, என்கிற ஏக்கத்தில் இயற்கை அதிக அளவில் துன்பத்தைக் கொடுக்க முயல்கிறது.  1970 மற்றும் 1980’களில் இந்த நாட்டில்(அமெரிக்கா) மிருகத்தனமான காமவெறி எங்கும் பரவலாகயிருந்தது. பெண் – ஆண்; ஆண்-பெண் வரம்பற்ற வெறி நிலவியது – மனிதனால் இதைத் திருத்தி இருக்க முடியாது. சட்டங்கள் தடுத்திருக்க முடியாது. AIDS தோன்றியவுடன் மனிதனின் ஒழுக்கம் வலிமையுற்றது. இது இளையதலைமுறையினருக்கு மிகப்பெரிய துக்கங்களிலொன்று, AIDS வந்ததால் ஒருவித மேல்வாரியான ஒழுக்கம் இந்த நாட்டில் வந்தது. யாருக்கும் யார்மீதும் நம்பிக்கையில்லை, பெண்ணுக்கு ஆணின் மீது சந்தேகம். ஆணுக்குப் பெண்ணின் மீது நம்பிக்கையின்மை.

டேவிட் ஸ்நோ:
            பிரபல தத்துவங்களில் எது மக்களிடையே மிகுந்த தீங்கு விளைவிக்கிறது?
சுவாமி சின்மயாநந்தர்:
ஆசைகளைத் தூண்டி அதிகப்படுத்துதல். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய எல்லா தன்னல ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்கிறான். சமுதாயம் என்ற ஒன்று இருப்பது நினைவிலிருப்பதில்லை. ஒவ்வொருவனும் தான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவனென பாவிக்கின்றான். அப்பாவுக்குத் தன்னைத் திருப்தி செய்து கொள்வதில் நாட்டம்; அதுபோலவே அம்மாவுக்கும்; குழந்தைக்கும். இந்த சூழ்நிலைக்கு, மாற்று மருந்து தன்னலமற்ற அன்பு மட்டுமே.

டேவிட் ஸ்நோ:
            சுயநலம் அமெரிக்காவில் அதிகமாக இருப்பதாக கருதுகிறீர்களா?
சுவாமி சின்மயாநந்தர்:
            இல்லை; அமெரிக்காவில் மட்டுமல்ல; உலகளாவி இருக்கிறது. ஏனெனில் யாரும் யாருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வதில்லை. சுயநலமின்றி மனித நேயத்துடனிருக்க வேண்டும் என்று உங்கள் பல்கலைகழகத்தில் யாராவது, எப்போதாவது உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்களா? சொல்லமாட்டார்கள்; எப்போதும் சொல்லமாட்டார்கள்- ஏனெனில் அது பாடப்புத்தகத்தில் சொல்லப்படவில்லை. ஆக நமக்கிருப்பதெல்லாம் நிறுவனங்கள்; அதில் நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்கள்- அவர்கள் வகுப்புக்கு வந்து, இதைப் பற்றியோ அல்லது அதைப்பற்றியோ தகவல்களும் புள்ளிவிவரங்களும் தருவர். அவ்வளவுதான். மனிதனின் உள்ளுலகு மிளிர வேண்டிய நல்ல விஷயங்களை எப்படி கற்றுத் தருவர்? அப்படி செய்தால்தானே மேன்மையான குணங்கள் பெற்று, ஒவ்வொருவரின் உள்ளிருந்தும் மேன்மையான வாய்ப்புகள் மலரும்? உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பதெல்லாம் “உனக்கு ஒரு வேலை தேவை” அதுவே வயிற்றுப் பிழைப்புக்கான வழி. அறநெறியோ (morality) நெறிமுறைளோ(ethics) கொள்கைளோ – கல்வியில் உட்படுத்தவே இல்லையே.
எனவே உலகில் நெறிமுறைகளே இல்லாமல் போய்விட்டன. இரக்கம், கருணை, மென்மையான சுபாவம் என்பதெல்லாம் இல்லவேயில்லை. பலவானின் பக்கம்தான் நீதி என்றாகிவிட்டது. உன்னிடம் துப்பாக்கியிருக்கிறது; அதனால் பிறருக்கு என்ன நேரினும் அக்கறையில்லை. துப்பாக்கி கலாசாரத்தில் அமைதிக்கும் ஐஸ்வர்யத்திற்கும் இடமில்லை.
இன்றைய நிலை எப்படியிருக்கிறதென்றால், கண்ணைமூடிக்கொண்டு உலகவரை படத்தில் உன்விரல் எந்த மூலையைத் தொட்டாலும் அந்தப் பகுதியில், போர் அல்லது கலகம், கலவரம் நடந்து கொண்டிருக்கிறதென்பதை உணரலாம்.
அமைதியும் சமாதானமும் நிலவவேண்டுமெனில், நாம் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் இன்றியமையாததாக மதிப்பிடுகிறோம் என்பதில் மாற்றம் வர வேண்டும். பெரிய பெரிய மகான்கள் எப்படி வாழ்ந்தனர்; எப்படி சமுதாயங்களை உண்டாக்கினர்; பிறர் நலத்தை முன்வைத்து, தியாகமனப்பான்மையுடன் எப்படி சேவை புரிந்தனர்- என்றெல்லாம் கற்று அறிய வேண்டும். வாழ்க்கையின் குறிக்கோள் சம்பாதித்தாலும், சேர்த்து வைத்துத் தான் மட்டும் அனிபவித்தல் அல்ல; நான் எவ்வளவு சமுதாயத்திற்குக் கொடுக்கிறேன் என்பது முக்கியம்.

டேவிட் ஸ்நோ:
            அமெரிக்கர்கள் ஆன்மீகத்தில் ஆர்வமுள்ளவர்களென நீங்கள் கருதுகிறீர்களா?
சுவாமி சின்மயாநந்தர்:
            இவர்களுல் ஆன்மீகத்திற்கான சாத்தியமிருப்பினும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

டேவிட் ஸ்நோ:
            ஐரோப்பியர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அமெரிக்கர்களின் ஆன்மீகம்?
சுவாமி சின்மயாநந்தர்:
அமெரிக்கர்கள் அறிவுள்ளவர்கள். அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமுள்ளவர்கள். எதையாவது விளக்கும் போது முழுகவனத்துடன் கேட்டுப் புரிந்து கொள்கிறார்கள். புரிந்தாலும் ….. அந்தோ பரிதாபம் ! வாழ்க்கையில் கடைபிடிக்க முடிவதில்லை, காரணம் – ஆசைகளும் சபலங்களும்.

டேவிட் ஸ்நோ:
            எந்த நாட்டில் சபலங்கள் தீவிரமாக உள்ளன? அமெரிக்காவில்….?
சுவாமி சின்மயாநந்தர்:
            அமெரிக்காவில் மட்டும்தான் என்று நான் சொல்லமாட்டேன். எல்லா மேம்பட்ட நாடிகளிலுமே தீவிரம்தான். ஜெர்மனியில் என்ன குறைவா? லண்டன்; பாரீஸ் – எல்லா வளர்ந்த நாடுகளிலுமே ஆசைகள், சபலங்கள் தீவிரம்தான். இவை ஆசியா, இந்தியா, அரேபியா நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நாடுகளில் ஆழ்ந்த ஆன்மீக பின்னணி இருப்பதால், இன்னமும் பெருவாரியான மக்கள் தங்களது பண்டைய வாழ்வின் நற்பண்புகளைப் பின்பற்றியே வாழ்ந்து வருகிறார்கள்.

டேவிட் ஸ்நோ:
            விரக்தியுடன் மகிழ்ச்சியற்ற மாணவனுக்கு ஒரே ஒரு அறிவுரை சொல்ல வேண்டுமெனின் என்ன சொல்வீர்கள்?
சுவாமி சின்மயாநந்தர்:
            என்ன செய்தாலும் கைகளிருக்குமிடத்தில் மனதைக் கொண்டுவரச் சொல்லுங்கள்.  செயலில் ஈடுபட்டிருக்கும் கைகள் இருக்குமிடத்தில் மனம் இருப்பதில்லை. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் சீரழிந்துக் கொண்டிருக்கிறது. ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது மனம் 10 km தூரத்திலிருந்தால், நீ தானியங்கி போல மனமற்ற ஜந்துவாகிறாய்.

டேவிட் ஸ்நோ:
            கைகளுள்ள இடத்தில் மனதைக் கொண்டுவருவதுதான் வெற்றியின் ரகசியமா?
சுவாமி சின்மயாநந்தர்:
            வெற்றிக்கு மட்டுமல்ல; போறிவாளன் ஆவதற்கும் இதுவே வழி. எப்படி ஐன்ஸ்டீன் பேரறிவு படைத்தவராக இருந்தார். அவர் ஆய்வகத்திலிருந்தபோதெல்லாம் அவருடைய மனம் முழுமையாக செயலில் ஈடுபட்டிருந்தது. ஆகையால் செயல் திறனில் உச்சத்தைத் தொட்டார். மனதின் ஒருமைப்பாடு சிதறினால், செயல்திரன் வீழ்கிறது. தோல்வியைத் தழுவ வேண்டிவருகிறது.இந்த மாதிரி மனிதர்களையே கொண்ட ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? நாடு முழுவதுமே அத்தகைய மனிதர்களால் ஆனது என்றால்…… சீரழிவைத்தவிர வேறென்ன சாத்தியம்?


Comments

Popular posts from this blog

Murugavel panniru Thirumurai

Lord Muruga 1000 names

Chinmaya Mission Tiruvallur

Bhagavad Gita Summary Classes