parukkulle nalla

பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு

ஞானத்திலே பர மோனத்திலே - உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு இந்தப் (பாருக்)

தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்திலே உப காரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு
தருவதிலே உயர் நாடு இந்தப் (பாருக்)

நன்மையிலே உடல் வன்மையிலே - செல்வப்
பன்மையிலே மறத் தன்மையிலே
பொன்மயில் ஒத்திடு மாதர்தம் கற்பின்
புகழினிலே உயர் நாடு இந்தப் (பாருக்)

ஆக்கத்தி லேதொழி லூக்கத்திலே - புய
வீக்கத்தி லேயுயர் நோக்கத்திலே,
காக்கத் திறல்கொண்ட மல்லர்தஞ் சேனைக்
கடலினி லேயுயர் நாடு – இந்தப் (பாருக்)

வண்மையி லேயுளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே,
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேயுயர் நாடு - இந்தப் (பாருக்)

யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேயுயர் நாடு - இந்தப் (பாருக்)

ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றற்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபய னீந்திடுங் காலி
யினத்தினி லேயுயர் நாடு - இந்தப்) (பாருக்)

தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
ஈட்டத்தி லேபயி ரூட்டத்திலே
தேட்டத்தி லேயடங் காத நிதியின்
சிறப்பினி லேயுயர் நாடு – இந்தப் (பாருக்)

Comments

Popular posts from this blog

Thiruppugazh Erumayil-Eri ஏறுமயிலேறி

Thiruppugazh - Kaithala-nirai-kani - கைத்தல நிறைகனி

CCC Downloads

Thiruppugazh - Agaramum-aagi - அகரமுமாகி