Thiruppugazh | சிவனார் மனங்குளிர
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென ...... வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது ...... புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு ...... விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே
Comments
Post a Comment